அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, May 03, 2011

Rddr786:கிரிடிட் கார்டும், அதன் விளைவுகளும்

முஸ்தபா எப்பொழுதும் போல் மிகவும் பரபரப்புடன் விறுவிறுப்பாக தனது அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் வெளிநாட்டில் ஒரு தனியார் அலுவலகத்தில் துணை கணக்காளராக வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் எந்த வித திட்டமிடுதலும் இல்லாமல் போற போக்கில் வாழ்கையை வாழுகிற பழக்கத்தை கொண்டவன். நாளைக்கு தேவையைக் கூட இன்று ஏற்ப்பாடு செய்ய திட்டமிடதாதவன், நாளைக்கு பார்த்துக்கலாம் என்று எப்பொழுதும் அலட்சிய போக்கைக் கொண்டவன்.
முஸ்தபா வீட்டிற்கு ஒரே பையன், அவன் உடன் பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் மட்டுமே. அவன் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அவனின் மனதில் பல வண்ண எண்ண அலைகள் ஓடிக் கொண்டு இருந்தது. அதில் ஒரு வண்ணமாக தங்கையின் படிப்பிற்காக பணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் தாயின் வேண்டுகோள், இரண்டாவது வண்ணமாக இன்றைக்கோ நாளைக்கோ என்ற நிலைமையில் பிரசவத்திற்காக தவித்துக் கொண்டிருக்கும் மனைவியின் தவிப்பு, மற்றொரு வண்ணமாக தினமும் நச்சரித்துக் கொண்டிருக்கும் உற்ற நண்பனின் நச்சரிப்பு, “என்னடா கடன் வாங்கி எத்தனை மாசம் ஆகுது, எனக்கும் பொறுப்பு, குடும்பம் எல்லாம் இருக்கு” என்று தினமும் வீட்டு அழைப்பு மணியை அடிக்கும் நண்பன், இத்தனையும் யோசித்துக் கொண்டே அலுவலகத்தை அடைந்தான் முஸ்தபா.
இருக்கையில் அமர்ந்த முஸ்தபாவிற்கு அருகில் உள்ள தொலைபேசி “ட்ரிங் ட்ரிங்” என்று நச்சரித்தது. தொலைபேசியில் மேலாளர் என்ன முஸ்தபா அந்த கிருஷ்ணனோட கணக்கு என்னாச்சுனு, இதோ அரை மணி நேரத்தில் ரெடி செய்து கொண்டு வர்ரேன் சார் என்று தொலைபேசியை வைக்கும் பொழுதே மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான், என்னோட கணக்கப் பார்க்கவே இந்த கணக்காளருக்கு நேரம் இல்லையாம் இதுல எங்க கிருஷ்னனோட கணக்கப் பார்க்குறது என்று.
சிறிது நேரம் கழித்து அலுவலக உதவியாளர் வந்து முஸ்தபா சார் உங்களப் பார்க்க டிப் டாப்பாக ஒருவர் வந்து இருக்கிறார். எதோ வங்கியிலுருந்து வந்து இருப்பதாக கூறுகிறார் எனற தகவலை தந்த அவனுக்கு, முஸ்தபா சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி வரச் சொல்லு என்று பதில் உரைத்தான்.
மிகவும் இளமையான ஒரு வாலிபன் முஸ்தபாவின் முன் வந்து நின்று குட் மார்னிங் சார் என்றான். பதில் உரைத்த முஸ்தபா யாரு நீங்க, எந்த வங்கியில் இருந்து வந்து இருக்கீங்க என்று வினவினான். அதற்க்கு அவன் சார் என்னை தெரியலையா, நான் உங்ககிட்ட பல முறை தொலைபேசியில பேசி இருக்கேன், இப்போ தான் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் வந்து இருக்கு, என் பேரு அந்தோணி என்று தன்னை அறிமுகப்படுத்திகொண்டான். சிறிது நேரம் கொசுவர்த்திச் சுருளை பின்னே ஓடவிட்டு யோசித்த முஸ்தபா ஓ….. அந்தோணி நீங்களா, இந்த கிரெடிட் கார்டு வாங்கிக்கச் சொல்லி எப்பொழுது தொலைபேசியில் அலைப்பீர்களே என்று கேட்டுவிட்டு, என்ன சார் தொலைப்பேசியில் உங்க குரல் மிகவும் பழமை வாய்ந்ததாக தெரிந்தது, நேரில் மிகவும் இளமை வாய்ந்தவரா இருக்கீங்களே என்று எல்லாருடனும் சகஜமாக பேசுவது போல் வந்து இருப்பது மனித உருவில் உள்ள சைத்தான் என்றறியாமல் எல்லோருடனும் பேசுவது போல் மிகவும் சகஜமாக பேசினான் முஸ்தபா.
உடனே அந்தோணி அவருடைய வேலையை செய்ய வேண்டும் அல்லவா, அப்பொழுது பேச ஆரம்பித்த அந்தோணி முஸ்தபாவின் பதில் வரும் வரை விடவில்லை. சார், எங்க வங்கியில கிரிடிட் கார்டு எடுத்தீங்கன்னா மற்ற வங்கியை விட மிகவும் குறைவான சதவிகிதத்தில் மட்டுமே வட்டி இடுகிறோம், உங்க அவசரத்துக்கு யாரிடமும் கை ஏந்த வேண்டியதில்லை, எந்தவித முதலீடும் இல்லாம இந்த காலத்துல யாரு சார் பணம் தருவாங்க, நம்ம நண்பர்கள் கூட நம்மள நம்புறது இல்ல பண விஷயத்துல என்ற அவன் வார்த்தையை கேட்டதும் முஸ்தபா என்ன இன்னைக்கு நம்ம நண்பன் திட்டினது ஒட்டு கேட்டதுபோல் பேசுகிறாரே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நீங்க எங்கப் போனாலும் பணத்தை ரெடி செய்துக்  கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படாது. உங்களுக்கு இத்தனை ஆயிரம் லிமிட் தருகிறோம், அப்படி இப்படி என்று மிகவும் கனிவாகவும், அன்பாகவும் பேசியதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த முஸ்தபா, நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் எங்கள் மத சட்டப்படி வட்டி வாங்குவது, தருவதும் தடுக்கப்பட்ட ஒன்று சார் என்று பதில் சொன்ன முஸ்தபாவுக்கு அவனும் ஒரு பதில் வைத்து இருந்தான். சார் நீங்க எதற்க்காக வட்டி கட்டனும், ஒரு முறை நீங்க எதோ அவசரத்துக்காக கார்ட பயன்படுத்துறீங்கனு வைத்துக் கொள்வோம், அத நீங்க உங்க சம்பளம் வந்தவுடனேயோ அல்லது வரவேண்டிய இடத்துல இருந்து பணம் வந்துவிட்டாலோ நீங்க உடனே திருப்பி செலுத்தி விட்டீங்கன்னா உங்களுக்கு எந்த வட்டியும் இல்ல சார். உங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல 45 நாள் டைம் இருக்கு சார். நீங்க என்ன விளையாட்டுக்கோ அல்லது அனவசியாமா பயன்படுத்தினா தான் இறைவன் கூட தண்டிப்பார். உங்க அவசரத்துக்கு தானே சார் பயன்படுத்த போறீங்க என்று பி.ஹெச்.டி  படித்ததுப் போல் சரமாரியாக பேசிக்கொண்டு இருந்தான் அந்தோணி.
முஸ்தபா சரிங்க சார் ஒரு விண்ணப்பத்தைக் கொடுங்க நான் எழுதிக் கொடுக்கிறேன், நாம கட்டுப்பாட பயன்படுத்தினா எதுக்கு பிரச்சினை வரப்போகுது என்று அவனுக்கு அவனே ஆறுதல் கூறிக் கொண்டு அந்தோணி இத்தனை நேரம் பேசியதால் அவனுடைய பேச்சு திறமை இவனுக்கு வந்து விட்டது போல் பேசிக்கொண்டே விண்ணப்பத்தை எழுதிக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டிய அந்தோணி சார் ரொம்ப நன்றி, கார்டு நீங்க இருக்க இடத்தை தேடி உங்க கைக்கு வரும் என்று நம்ம வந்த வேலை முடிந்தது என்று சந்தோஷத்துடன் கிளம்பினான். அடுத்த 20 நாட்களில் அந்தோணி சொல்லியது போல் கிரிடிட் கார்டும் கைக்கு எட்டியது.
அன்று இரவு வீட்டை அடைந்தவுடன், அவனுடைய கடன் அனைத்தையும் கணக்குப்போட்ட கணக்குப் பிள்ளை முஸ்தபாவுக்கு கடன் கழுத்தை நெறிக்கும் அளவு இருந்தது. என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டு இருந்தான். எப்படியாவது அம்மாக்கிட்ட பேசி அங்க இருக்க அந்த நிலத்த வித்து எல்லாக் கடனையும் அடைச்சு, தங்கையையும் படிக்க வச்சுடுலாம்னு தன்னை தானே தேத்திக் கொண்டான்.
இப்படியே குழப்பத்தில் இரண்டு, மூன்று நாட்கள் ஓடியது. அவனுடைய அம்மாவிடம் இருந்து தொலைபேசி வந்தது, “என்னப்பா தங்கை படிப்புக்காக பணம் கேட்டேனே என்னாச்சுனு, உடனே தொலைபேசியை அம்மாவின் கையில் இருந்து பிடுங்கி பேசிய தங்கை “என்ன அண்ணா நான் என்ன கேட்டாலும் செய்வேன் சொன்னியே இப்போ மேல் படிப்பு சேருவதற்காக கேட்கிறேன் சீக்கிரமா பணம் அனுப்பு, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு” என்று அன்பு தங்கையின் கொஞ்சல்.
ஏற்கனவே இரண்டு தங்கையை மேல் படிப்பு வரை படிக்க வைத்த தாய்,  பரீட்சை முடிவு வரும் முன்னே கல்யாணம் செய்து கொடுத்தார்கள். தங்கைகளின் படிப்புக்காகவும், அவர்களின் கல்யாணத்திற்காகவும் தன்னை அறிந்த தெரிந்த அனைவரிடமும் தன் வரவை மறந்து வரவுக்கு மேல் கடன் இருக்கும் அளவுக்கு, தான் வாங்கிய கடனே அவனது கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கும் முஸ்தபாவுக்கு என்ன செய்வது என்றறியாமல் குழம்பி போய் இருந்தான்.
அம்மாவிடம் பதில் உரைத்த முஸ்தபா இங்க கடன் தொல்லை, கொஞ்சம் கஷ்டமா இருக்கு, வாங்கின வட்டிக்கு தான் வாங்கணும், அங்க எதாவது ஏற்ப்பாடு பண்ண முடியாதா, அந்த நிலத்த…. என்று இழுத்த அவனுக்கு வந்த பதில், இங்க நான் என்ற பண்றது, யார்கிட்ட போய் கேட்கிறது, அந்த நிலத்த எல்லாம் இப்போ விற்க முடியாது, அது உன் தங்கை கல்யாணத்துக்கு வேண்டும், பெத்த பிள்ளையா  உன்னால இதக் கூட செய்ய முடியாதா? உன் தங்கையின் மீது நீ வச்சு இருக்கும் பாசம் இவ்வளவு தானா என்று மிகவும் கோபத்துடன், அவன் மீது உள்ள கடன் சுமையை மறந்த அம்மா அவன் “வட்டிக்கு தான் வாங்கணும்” என்று சொன்ன வார்த்தையைக் கூட காதில் போட்டுக் கொள்ளாமல் சட்டென்று தொலைபேசியை துண்டித்தார்கள்.
முஸ்தபா என்ன பண்ணலாம், நம்மள நல்ல புரிஞ்ச ஹனிபாகிட்ட போய் உதவி கேட்கலாமா, இல்ல அலுவலகத்துல லோன் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்த அவனுக்கு அவனது ஆழ் மனதின் இருக்கையில் உட்கார்ந்து இருக்கும் சைத்தான். அவனது எண்ண அலைகளை தூண்டி விடுகிறான். வேணாம் ஏற்கனவே ஒரு நண்பனிடம் நமது மானம் போய் விட்டது, அலுவலத்துல வாங்கின மாசம் மாசம் புடிச்சுப்பாங்க,  அப்பறம் எப்படி வீட்டுக்கு அனுப்புறது, மற்றக் கடனை அடைப்பது என்று அவனது எண்ணத்தை திருப்பி விடுகிறான், வேற வழியே இல்லை கிரிடிட் கார்டுல பணம் எடுத்து தங்கை படிப்பு செலவுக்கு அனுப்ப வேண்டியது தான் என்று கொஞ்சம் கொஞ்சமாக முஸ்தபாவின் மனதை சைத்தான் தன வழியில் மாத்திக் கொண்டு இருந்தான். நம்முடன் எப்பொழுதும் நம் வலப்புறத்தில் இருக்கும் தீயவற்றியிலுருந்து தடுக்கும் மலக்குமார்கள் அவனை சைத்தானின் கெட்ட தூண்டுதலில் இருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள் “நேத்து தானே  ஹதீஸ்ல படிச்ச, வட்டி வாங்குவதும், கொடுப்பதும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டக் காரியம், அதில் ஈடுபடுபவர்களுக்கு கொடிய நெருப்பினால் ஆன நரகம் உண்டு என்று”, ஆனால் நம்மை எப்பொழுது அல்லாஹ்விற்கு எதிரே செயல் படத் தூண்டும் சைத்தான் சொல்கிறான் “வட்டி வாங்குறது தானே குற்றம், நாம அந்தோணி சொன்னது போல் அடுத்த மாசம் சம்பளத்துல மத்த செலவுகள குறைத்துக் கொண்டு கட்டிடலாம்” என்று. ஒரு வழியாக சைத்தான் முஸ்தபாவை அவன் பக்கம் இழுத்தான்.
மறுநாள் காலையில் ஒரு வித மனக் குழப்பத்துடன் கிரெடிட் கார்டுல பணத்தை எடுத்து அனுப்பினான் முஸ்தபா. எப்பொழுதும் எதற்காகவும் திட்டமிடாத முஸ்தபா கிரிடிட் கார்ட எப்படியாவது வட்டி இல்லாமல் கட்டிடனும்னு ரொம்ப திட்டமிட்டுக் கொண்டு இருந்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் மனைவியின் அழைப்பு “என்னங்க டாக்டர் மருத்துவமனையில சேர சொல்லிட்டாங்க இன்னிக்கோ நாளைக்கோ குழந்தை பொறந்துடும்னு சொல்லி இருக்காங்க, நீங்க இன்னும் பணம் அனுப்பலையே என்று” தான் அப்பாவாக போவதை எண்ணி அவனால் சந்தோசம் கூட பட முடியாத நிலை, ஓகே நீ கவலைப்படாம இரு, நான் எப்படியாவது நாளைக்குள்ள பணத்த அனுப்பி விடுகிறேன் என்று தனது மனைவிக்கு ஆறுதல் சொன்னான். அப்பவே மனைவி சொன்ன, கருத்தரித்த நாள் முதல் இன்று வரை, ஏற்கனவே உங்களுக்கு நிறைய கடன் சுமை இருக்கு, அதனால இப்பவே கொஞ்சமா கொஞ்சமா பிரசவத்துக்கு தேவையான செலவ சேர்த்து வைங்க இல்லேன்னா கடைசி நிமிஷத்துல கழுத்தை நெரிக்கும்னு, நான் தான் அலட்சியமா அத அப்போ பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன் என்று புலம்பிக் கொண்டான். வேறு வழியே இல்ல கார்டுல தான் எடுத்தாகனும், யோசிக்க நேரம் இல்லன்னு ஏற்கனவே தங்கை படிப்புக்காக பயன்படுத்திய தவணையை கட்டி முடிக்கும் முன்பே இதற்க்காகவும் பயன்படுத்தினான்.
சொற்ப சம்பளத்தில் வேலைப் பார்க்கும் முஸ்தபாவுக்கு எங்கிருந்து முழு பணத்தையும் ஒரு மாதத்தில் வட்டி இல்லமால் கட்டுவது. நாட்கள் கடந்தன, வட்டியும்  முதலும் அதிகரித்துக் கொண்டே போனது. சில மாதங்கள் தவணையை சரியாக கட்டிய முஸ்தபா அவனுடைய மற்ற கடனின் தொல்லையால் கட்டாமல் விடவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டான். முதன் முதலில் தொலைபேசியில் அழைத்து மிகவும் அன்பாகவும் கனிவாகவும் பேசிய அந்தோணி தொலைபேசியில் முஸ்தபாவை அழைக்க ஆரம்பித்தான். சார் என்னாச்சு இந்த மாசம் தவணை கட்டல, அந்த மாசம் தவணை கட்டல என்று நச்சரிக்க ஆரம்பித்தான்.
பல மாதங்கள் வருடமாகியது, அந்தோணி தொலைபேசியில் மிகவும் கடிந்த வார்த்தைகளில் பேசினான், இப்படியே போனா உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்னு. அவன் முதன் முதலில் அவனை நேரில் கண்டு பேசிய கனிவான, அன்பான  வார்த்தைகளை எண்ணிப் பார்த்தான். முஸ்தபாவுக்கு கண்ணீர் மல்கியது. இது தான் உலகம், அன்றைக்கு அப்படி பேசிய மனிதர் இன்றைக்கு இப்படி மாறிவிட்டாரே என்று. நம்மளையும், நம்ம சூழ்நிலையையும் அறிந்த பெற்றோரும், உடன் பிறந்தவர்களுமே சில நேரம்  பணத்திற்காக வெறுத்து ஒதுக்கி பேசுகிறார்கள். இவர் யாரோ தானே, குற்றம் நம் மீது தான். யோசிக்காமல் செய்த காரியத்துக்கு கிடைத்த பலன் இது என்று, தன்னை தானே வருந்திக் கொண்டான்.
மறுபடியும் அந்தோணி முஸ்தபாவை தொலைபேசியில் அழைக்கிறான், சார் இது தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, சீக்கிரமா உங்க கடனை அடைக்க முயற்ச்சி பண்ணுங்க, நீங்க எங்கயும் தப்பிக்க முடியாது. நீங்க இங்க இருந்து உங்க நாட்டுக்கு போகனும்னு முயற்சி செய்தாலும் விமான நிலையத்துலையே உங்கள புடிக்கிற அளவுக்கு எங்க மேலிடத்தில் முயற்ச்சி எடுத்து இருக்காங்க. இத முழுசா அடைக்காம நீங்க எங்கயும் போக முடியாதுனு எச்சரிக்கை விடுத்து தொலைபேசியை துண்டித்தான்.
படிப்பை முடித்து கல்யாணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கும் தங்கைக்கு என்ன செய்வது, பெற்ற பிள்ளையின் முகத்தை வெறும் புகைப்படத்தில் மட்டும் பார்த்தும், தொலைபேசியில் குரலை கேட்டும் ஆறுதல் அடைந்து கொண்டு இருக்கும் முஸ்தபா தான் மனைவி மக்களை எப்படி காணுவது.
இப்படிப் பட்ட சூழ்நிலைக்கு எதுக் காரணம்.
1.நம்மை புரிந்து நமக்கு உதவி புரியாத குடும்பமா?
2.திட்டமிடாத வாழ்க்கையா?
3.அல்லாஹ்வையும் மறுமையையும் மற்றும் நபி மொழியையும் மறந்து இவ்வுலக வாழ்க்கையில் உள்ள குடும்பத்திற்காக தம்மை இணைத்துக் கொண்டதா?
இப்படி எத்தனையோ சகோதரர்கள் தங்கள் குடும்பத்திற்காக தங்களை அடுத்த நாட்டில் அடகு வைத்து கொண்டு இருக்கிறார்கள். அதில் இருந்து தப்பித்து சரியான வழியில் செல்லும் ஒருவராக நீங்கள் இருந்தால் முஸ்தபா போன்ற ஆட்களுக்கும், குடும்பத்திற்கும் நீங்கள் கூறும் அறிவுரை என்ன? நீங்கள் கூறும் அறிவுரை இனி வளரும் தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். 
thanks:-thoothuonline

0 comments: