அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Saturday, November 13, 2010

இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் : ஆய்வு


கடந்த 23 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிக‌ளி‌ல் மட்டுமே தோற்றுள்ளது. 12 வெற்றிகள் பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரை சமீபமாக இழக்கவில்லை. இவையெல்லாம் இந்தியாவுக்கு நம்பர் 1 இடத்தைப் பெற்றுத் தந்து இதுவரை தக்கவைக்க உதவினாலும் இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது என்றே தோன்றுகிறது.

நியூஸீலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் ஏமாற்றமளிப்பதாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸைக் குறிப்பிடவில்லை. முதல் இன்னிங்ஸிலேயே சேவாக் தவிர மற்றவர்கள் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. திராவிட் உட்பட.

சேவாக் துவக்க வீரராகக் களமிறங்கத் துவங்கிய கங்கூலி தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் தொடரிலிருந்துதான் திராவிட் ஒரு டெஸ்ட் பேட்ஸ்மென், அதுவும் மிகப் பெரிய இன்னிங்ஸ்களை விளையாடும் சுவர் என்ற பெயர் பெற்றார் என்றால் அது மிகையாகாது. அதற்கு முன் அவர் ஆடிய மிக முக்கிய இன்னிங்ஸ் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கட்டா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லஷ்மணுடன் வெற்றிக் கூட்டணி படைத்து அவர் எடுத்த சதம் ஒன்றே முக்கியமானது. இது 2001ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

சேவாக் துவக்க வீரராகக் களமிறங்கி இங்கிலாந்தின் துவக்க பந்து வீச்சாளர்களை விளாசி தன்னம்பிக்கையை கெடுத்த பிறகே 3ஆம் நிலையில் களமிறங்கும் திராவிட் பிரகாசிக்கத் துவங்கினார். அந்தத் தொடரில் அவர் 4 சதங்களை அடித்தார். அதில் ஒன்று இரட்டைச் சதம்.

தொடர்ந்து திராவிடின் சாதனைகளை எடுத்துப்பார்த்தால் சேவாக் ஆடி வெளூத்த ஆட்டங்களில்தான் இவரும் நன்றாக விளையாடியுள்ளார். சேவாக் நடுவில் அணியில் இல்லாத போது திராவிட் திணறினார்.

கடைசியாக அவுஸ்திரேலியா சென்ற போது கூட தட்டுத்தடுமாறிய திராவிட், பெர்த் டெஸ்ட் போட்டியில் சேவாக் மீண்டும் டெஸ்ட் போட்டிக்குள் அழைக்கப்ப்பட்டு அவரும் துவக்கத்தில் 30 ரன்களை அடித்த பிறகே திராவிட் 91 ரன்களை எடுத்தார்.

ஆனால் அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இவர் சாப்பிட்ட பந்துகளுக்கு அளவேயில்லை. சேவாக் உணவு இடைவேளைக்கு முன்பே சதம் எடுத்திருப்பார் ஆனால் திராவிட் போட்ட பிளேடால் அவருக்கு ஸ்ட்ரைக் கிடைக்காமல் போனது.
மேலும் சேவாகின் ஆட்ட ரிதமே திராவிடால் கெட்டு விடுவதையும் அன்று மட்டுமல்ல பல இன்னிங்ஸ்களில் நாம் பார்த்தாகிவிட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சேவாகிற்கு இன்னிங்ஸை விட்டுக் கொடுத்து தான் ரன் - அவுட் ஆகியிருக்க வேண்டும். அன்று அவர் செய்த தவறால்தான் சேவாக் ரன் அவுட் ஆனார். இந்தியாவும் தோல்வி ஏற்படும் நிலைக்கு வந்தது. மீண்டும் லஷ்மண்தான் காப்பாற்றினார். ஹர்பஜன் சிங் அபாரமாக விளையாடினார் என்பதில் சந்தேகமில்லை. அதுவும் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே அவர் அதிரடியாக விளளயாடியதோடு அவரது இன்னிங்ஸ் பயனுள்ளதாகவும் அமைந்தது. திராவிட், ஹர்பஜன் சிங் போல் விளையாட முயற்சி செய்ய வேண்டும். அவரால் முடியாதது ஒன்றுமில்லை.

அது எப்படி 20 ஓவர் கிரிக்கெட்டில் அடித்து ஆடுகிறார். டெஸ்ட் போட்டி என்றால் மந்தமான, மட்டையான ஆட்டக்களங்களில் ஒன்றுமில்லாத பந்து வீச்சில் அவரால் அடிக்க வேண்டிய பந்துகளைக் கூட அடிக்க முடியவில்லை?

இதனால் இந்தியாவுக்குத் தேவையான் முதல் மாற்றம் திராவிடை அந்த இடத்திலிருந்து தூக்கிவிட்டு லஷ்மணை 3ஆம் நிலையில் களமிறக்குவது சேவாகிற்கும் அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனை இந்திய கேப்டனும், பயிற்சியாளரும் பரிசீலனை செய்ய வேண்டும்.

புதிரான சச்சின் டெண்டுல்கர் ஆட்டம்!

சச்சின் டெண்டுல்கர், இவர் மாஸ்டர் பேட்ஸ்மென், கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர், ஆனால் சில வேளைகளில் ஒன்றுமில்லாத ஆட்டக்களத்தில் இவரது ஆட்டம் புரியாத புதிராக உள்ளது.

நெருக்கடியான தருணத்தில் 3ஆம் நிலையில் களமிறங்கிய செடேஷ்வர் புஜாரா ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக அதிரடி முறையில் விளையாடி தன்னை நிறுவுகிறார்.

ஆனால் சச்சின் சில வேளைகளில் விளையாடுவது பலத்த எரிச்சலை ஏற்படுத்துவதாய் அமைகிறது. முதல் நாள் ஆட்டக்களம் ஒன்றுமில்லாத மட்டைக் களம், சேவாக் வேறு அடித்து நொறுக்கிவிட்டுச் சென்றுள்ளார். திராவிடும் சதம் எடுக்க விளையாடி வருகிறார், ஆனால் சச்சின் என்ன செய்தார்? 133 பந்துகளைச் சாப்பிட்டு 40 ரன்களுக்கு திக்கு முக்காடி பிறகு சொத்தை ஷாட் ஒன்றில் ஆட்டமிழந்து பெவிலியன் செல்கிறார்.

133 பந்துகளில் அரைசதம் எடுக்க முடியாத அளவிற்கா நியூஸீலாந்து பந்து வீசியது? இவரைப் போன்ற, டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் ஆகியவற்றில் சுமார் 30,000 ரன்களை நெருங்கும் ஒரு வீரர் இரண்டிலும் 90 சதங்களுக்கு மேல் எடுத்தவர் இப்படி அறுவையைப் போட்டால் இளம் வீரரான ரெய்னாவுக்கு களமிறங்கும் போது எப்படி தன்னம்பிக்கை வரும்?

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்புதான் லண்டன் கார்டியன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தன் பேட்டிங்கை எவ்வாறு மேலும் மெருகேற்றுவது என்பதை முயன்று வருவதாகத் தெரிவித்தார்.

அந்த பேட்டிக்கு பிறகு இந்த பேட்டிங்கைப் பார்த்தால் அவர் மேலும் நுணுக்கங்களை மேம்படுத்துவது இம்மாதிரியான பேட்டிங்காகத்தான் இனிமேல் இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் கண்டு உலக சாதனைப் படைத்த ஒரு வீரர் கொஞ்சம் கூட உலகின் ஆகச்சிறந்த பேட்ஸ்மென் என்ற ஹோதா இல்லாமல் சொத்தைப் பந்து வீச்சை மட்டைபோட்டு அறுத்தார் என்றால் அது என்ன வகை பேட்டிங் என்று நமக்குப் புரியவில்லை.
அவர் மேம்படுத்திய பேட்டிங் நுணுக்கம் இதுதான் என்றால் இவர் ரெய்னாவுக்குப் பிறகு களமிறங்குவதே சிறந்தது என்று தோன்றுகிறது. ஆனால் சச்சின் அபார புத்திக் கூர்மை படைத்தவர், இதனால் இது போன்ற இன்னிங்ஸ் அவருக்கும் இந்தியாவுக்கும் வெற்றி தேடித் தராது என்பதை புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புவோமாக.!

தோனி, கம்பீர்

இந்திய அணியில் கம்பீரின் இடம் தற்போது கேள்விக்குரியாகியுள்ளது. அவரது வழக்கமான ஆக்ரோஷ பேட்டிங் சுத்தமாக காலியாகி சந்தேகமான கால் நகர்த்தல்கள், மட்டையின் கோணம் தாறுமாறாக அமைவது என்று அடிப்படைத் தவறுகளைச் செய்துவருகிறார். அவர் 6 சதங்களை தொடர்ச்சியாக அடித்து டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்தவராக இருந்தாலும் அவருக்கு ஒன்று கேரி கர்ஸ்டன் தீவிரப் பயிற்சி அளிக்கவேண்டும், அல்லது அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு மீண்டும் வந்து நல்ல இன்னிங்ஸ்களை விளையாடி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. அதுவரை முரளி விஜய்தான் களமிறக்கப்பட வேண்டும். இது ஒரு முக்கியமான மாற்றமாகும்.

அதே போல் தோனிக்கு குருட்டாம்போக்கு அதிர்ஷ்டத்தினால்தான் இதுவரை வெற்றிகள் ஏற்பட்டுள்ளன. இவர் இருபது ஓவர், ஒருநாள் கிரிக்கெட்டிற்கே லாயக்கானவர். டெஸ்ட் போட்டிக்கு இவர் முதிர்ச்சியற்றவர். அவரது பேட்டிங்கும் அதனை நிரூபிக்கிறது. எனவே செடேஷ்வர் புஜாராவை அணியில் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்த்திவ் படேலுக்கு மீண்டுமொரு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.

மேலும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாடி வரும், அதுவும் சிறப்பாக விளையாடி வரும் லஷ்மண் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக்கப்பட வேண்டும். கங்கூலிக்குப் பிறகே இவரை கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும் என்று இயன் சாப்பல் கருத்து தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூட லஷ்மண் அணித் தலைமைப் பொறுப்பிற்கு மற்றெல்லாரையும் விட தகுதி பெற்றவர் என்பதை மீண்டும் அழுத்திக் கூறியிருந்தார்.

எனவே தோனி 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முழுதும் கவனம் செலுத்த வேண்டுமெனில் முக்கியமான தென் ஆப்பிரிக்கத் தொடரில் அவரை டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு லஷ்மணையே கேப்டனாக அறிவிக்க வேண்டும்.

வேண்டுமானால் தோனியை விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக அணியில் வைத்துக் கொள்ளலாம் அதுவும் அவர் பேட்டிங்கில் ரன்களை சீரான முறையில் எடுக்கும் போது மட்டுமே அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் நீடித்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இல்லையெனில் மாற்று விக்கெட் கீப்பர்களை இந்திய அணித் தேர்வுக் குழு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

வெற்றிதான் பெற்றுக் கொண்டிருக்கிறோமே என்று அணியின் பலவீனங்களை மூடிமறைத்துச் செயல்பட்டால் மீண்டும் சீரழிவுக்குச் செல்லும் நிலை ஏற்படும்!
Thanks: http://paristamil.com/

0 comments: