அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) இந்தஇணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி! மீண்டும் மீண்டும் வருகைதருமாறு அன்புடன்அழைக்கிறேன்.. உங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் எழுதவும்.. 608304@gmail.com

Tuesday, November 23, 2010

மேலவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு



சென்னை : சட்ட மேலவை தேர்தலுக்கான வரைவு வாக்காளர்
பட்டியல், மாநிலம் முழுவதும் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் உள்ளிட்ட பணிகளை, டிசம்பர் 7ம் தேதி
 வரை மேற்கொள்ளலாம் என, தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்ட மேலவைக்கு, விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 78 உறுப்பினர்களைக் கொண்ட மேலவைக்கு, 26 இடங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மூலமும், 26 இடங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்
மூலமும் நிரப்பப்படும். 12 உறுப்பினர்களை கவர்னர் நேரடியாக
நியமிப்பார். மீதமுள்ள 14 இடங்களில், 7 இடங்கள் பட்டதாரிகளைக் கொண்டும், 7 இடங்கள் ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்பப்பட
 உள்ளன. இதற்காக, கடந்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல்
தயாரிப்பு பணி நடந்து வந்தது. இதையடுத்து, நேற்று மாநிலம்
 முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரின் செய்திக் குறிப்பு: சட்ட மேலவை பட்டதாரிகள் தொகுதிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளில், கடந்த அக்டோபர் 1ம் தேதியில் இருந்து,
கடந்த 6ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்தது.
இதன் வரைவு வாக்காளர் பட்டியல்கள், தமிழகம் முழுவதும் நேற்று வெளியிடப்பட்டன. தேர்தல் பதிவு அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்களை பார்க்கலாம். பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதிவாய்ந்த நபர்கள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை டிசம்பர் 7ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
பட்டதாரிகள் தொகுதிகளில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், படிவம்
18, ஆசிரியர்கள் தொகுதிகளில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், படிவம்
19ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம். பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்கள் குறித்த ஆட்சேபனை (படிவம்-7)படிவத்தை, தேர்தல் பதிவு அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.

தேவையான விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் கிடைக்கும். மேலும், http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்தும், "டவுண்லோடு' செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர், நேரடியாக படிவம் 18ஐ அளிக்க விரும்பினால், நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் சுய சான்றொப்பமிட்ட நகலுடன்,
 அசல் சான்றிதழ்களையும் காட்ட வேண்டும். கூடுதல்
நிர்ணயிக்கப்பட்ட அலுவலரால் சான்றொப்பமிட்ட பட்ட
சான்றிதழின் நகலை இணைத்தும், நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம்
 படிவம் 18ஐ சமர்ப்பிக்கலாம். அப்படி அனுப்பும்போது, நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம், அசல் சான்றிதழ்களை காட்டத் தேவையில்லை. விண்ணப்பதாரர், தபால் மூலம் படிவம் 18ஐ அனுப்ப விரும்பினால், விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் சான்றிதழில் சுய சான்றொப்பம்
 இட வேண்டும். மேலும், கூடுதல் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் (அரசு கல்லூரி முதல்வர்கள், பி.டி.ஓ.,- நகராட்சி கமிஷனர்கள்) ஒருவரால் சான்றொப்பம் பெற வேண்டும். இவ்வாறு பிரவீன்குமார்
தெரிவித்துள்ளார்.

ஏழு பட்டதாரிகள் தொகுதிகளில், இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து
861 பேரும், 7 ஆசிரியர் தொகுதிகளில் 72 ஆயிரத்து 77 பேரும் விண்ணப்பித்துள்ளனர். டிசம்பர் 7ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால், மேலும் பல ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்
செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல்,
டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும்.

Thanks:  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=131757 

0 comments: